புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை!
சத்குரு ஸ்ரீ தியாகராஜருக்கும் புரட்சிக்கவிஞர் பாராதிதாசனுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கிறீர்களா? - "மருகேலரா ஓ ராகவா" - அதான் தொடர்பு!
இன்று பாவேந்தர் பாரதிதாசனாரின் பிறந்த நாள் என்று நண்பர் சிவபாலனின் பதிவில் கண்டேன் (Apr 29)
பாவேந்தர் தமிழிசைக்கு ஆற்றிய ஆரம்ப கால நற்பணிகள் பல.
அதான் இன்று, இந்த பாரதிதாசன் சிறப்புப் பதிவு!
சரி, இதில் தியாகராஜர் எங்கிருந்து வந்தார்?
நானும் இப்படித் தான் முதலில் திருதிரு என்று முழித்தேன்.
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில், ஒரு தமிழ்ப் பாட்டை அனுப்பி இருந்தார்.
படித்துக் கொண்டே சென்றால்,
"தியாகராஜ" என்று கடைசி வரியில் முத்திரை வருகிறது!
அட, இது என்ன, தியாகராஜ கீர்த்தனையின் மொழி பெயர்ப்பு அச்சு அசலாக, அப்படியே உள்ளதே என்று வியந்து போனேன்.
ஆனால் இன்னும் அதிசயம் காத்து இருந்தது.....
அது பாவேந்தர் பாராதிதாசன் எழுதியது என்றார்.
ச்சே...இருக்கவே முடியாது;
பாரதிதாசன் தனித்தமிழ் ஆர்வலர், புரட்சிக்கவி, தந்தை பெரியாரின் கொள்கைகள் கொண்டவர் - அவர் இராமபிரான் மேல் பாட்டு எழுதுவாரா?
அட போங்கப்பா, ஜோக் பண்ணாதீங்க என்று சொன்னால்....
அட, அது பாரதிதாசன் எழுதியது தானாம்!
இளைஞர்கள் எல்லாம் சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் என்று ஒரு அமைப்பு தொடங்கினார்கள் பாரதியார் காலத்திலேயே!
அதில் இருந்த இளைஞர் தான்
பாரதிதாசன் - அப்போது கனக சுப்புரத்தினம்.
முருகப் பெருமான் மேல் பாடல்கள் எல்லாம் கூட புனைந்துள்ளார் நம் பாவேந்தர்.
ஆனால் அதெல்லாம் இளமையில்; இள மயில் மேல் இளமையில் பாட்டு!
அப்போது கூட தமிழார்வமும் துடிப்பும் உள்ளவராம் கவிஞர்.
தமிழால் எதுவும் செய்ய முடியும் என்கிற துடிப்பு!
தமிழிசை பற்றி ஒரு முறை விவாதிக்கும் போது, இதெல்லாம் தமிழிலே செய்ய முடியுமா என்று ஒரு கேள்வி வந்ததாம். பாரதிதாசனுக்குப் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
சரி, அனைவரும் போற்றி வணங்கும் தியாகராஜரின் கீர்த்தனைகளை,
மெட்டு மாறாமல், கட்டு குலையாமல், அதே மதிப்புடன்,
அப்படியே தமிழில் பாடினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.
உடனே யாரிடமோ பாட்டும், அதன் பொருளும் கேட்டு உணர்ந்து கொண்டார்.
அப்படியே சில பிரபலமான கீர்த்தனைகளையும் தமிழில் மொழிபெயர்த்தாராம்.
அடடா, தியாகராஜ கீர்த்தனையின் சிறப்பே அதன் சொல் எளிமையும், ஆழ்ந்த பக்தியும் தானே!
சுகமான ராகத்தை அதனுடன் கூட்டிப் பாடினால், எவ்வளவு சுகம்!
அதை அப்படியே பாரதிதாசன் தமிழில் கொணர்கிறார் என்றால்! அச்சோ!
மின்னஞ்சல் படித்து விட்டு, நண்பருக்கு உடனே தொலைபேசினேன்!
"அட , எங்க புடிச்சப்பா இந்தப் பாட்டை?
இதே போல வேறு ஏதாச்சும் இருக்கா தெரியுமா?", என்று கேட்டேன்!
அவரோ, இது fwdஇல் வந்ததாகவும், பாரதிதாசன் கவிதைகளிலோ, இல்லை அவர் கட்டுரை எழுதிய பத்திரிகைகளிலோ, தேடிப் பார்த்தால் கிடைக்கும் என்று சொன்னார்.
இது போல் ஒரு மூன்று நான்கு கீர்த்தனையாவது மொழி பெயர்த்து எழுதியிருக்க மாட்டாரா என்று எனக்கு ஒரு நப்பாசை வந்து விட்டது!
உடனே பாரதிதாசன் கவிதைப் புத்தகத்தில் தேடிப் பார்த்தேன்... காணோம்!
சரி, சென்னையில் யாரிடமாச்சும் சொல்லித் தேடச் சொல்ல வேண்டும்!
சிந்து பைரவி படம் என்று நினைக்கிறேன்.
சிவகுமார் தமிழிசையில் ஆர்வம் காட்ட, சுகாசினி சில தியாகராஜ கீர்த்தனைகளைத் தமிழில் பாடிக் காட்டுவார். உடனே, "நீ தய ராது" என்ற பாடலை
"உன் தயவில்லையா" என்று ஒலிபரப்புவார்கள்.
ஆனால் பாடல் முழுக்கவும் இருக்காது. சில வரிகளில் சினிமாவுக்காக, உடனே முடிந்து விடும்!
இந்தப் பாடலைப் பாருங்க!
"மருகேலரா ஓ ராகவா" என்ற பாடல்! என்னிடம் இருந்து ஏன் மறைந்து கொள்கிறாய் ராமா? - இதான் தியாகராஜரின் கேள்வி!
மிகப் பிரபலமான பாடல்! நிறைய கச்சேரிகளில் இதைப் பாடுவார்கள்; கல்யாண வீடுகளில் கூட பாடப்படும் என்றும் நினைக்கிறேன்.
ஆனா பாருங்க, நமக்கும் இசைக்கும் ஏணி வச்சா கூட எட்டாது!
எல்லாமே சுகமாக ரசிக்கும் எண்ணத்தோட சரி. அதிலும் கர்நாடக,தமிழ் இசைகளின் மீது ஒரு விதமான காதல்....
ஆனா இலக்கணம் எல்லாம் ஒரு மண்ணும் எனக்குத் தெரியாது! தெரிஞ்சுக்கனும்னு ஆவல் மட்டும் தான் இருக்கு!
ஆனா உறுதியாகச் சொல்ல முடியும், யார் வேண்டுமானாலும் இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்கலாம்! அப்படி ஒரு துடிப்பான மெட்டில் அமைந்த பாடல்.
நீங்களே கேட்டுப் பாருங்களேன்....
முக்கியமாகப் படித்தும் பாருங்க....
அழகுத் தமிழ், சுந்தரத் தெலுங்கு இரண்டிலும்!!!
பாவேந்தர் அவ்வளவு அழகாக தமிழ் பெயர்த்துள்ளார்!
இது மொழி பெயர்ப்பு என்று சொல்லவே மனம் வரவில்லை. அதனால் தமிழ் பெயர்ப்பு என்றேன்!
பாவேந்தரின் பாரதிதாசன் கைவண்ணத்தில்...
இதன் மூலப் பாடலைத் தெரிந்தவர்கள், அதே மெட்டில் பாடிக் கொண்டே,
தமிழில் வாய் விட்டுப் படிக்கலாமே....
தமிழில் இதை பாடித் தர யாராச்சும் உதவி செய்தால் இன்னும் சிறப்பு:-)
பல்லவி
மறைவென்ன காண் ஓ ராகவா?
அனுபல்லவி
மறையும் அனைத்தின் உருவான மேலோய்
மதியோடு சூரியன் விழியாகக் கொண்டோய்
(மறைவென்ன காண் ஓ ராகவா)
சரணம்
யாவும் நீயே என்றன் அந்-தரங்கம் - அதில்
தீவிரத்தில் தேடித் தெரிந்து கொண்டேன் - ஐயா
தேவரீரை அன்றிச் சிந்-தனை ஒன்றும் இல்லேன்
காக்க வேண்டும் என்னை, தியாகராஜன் அன்பே!
(மறைவென்ன காண் ஓ ராகவா)
இது சத்குரு ஸ்ரீதியாகராஜர் பாடிய மூலப் பாடல்
(சொற்களின் பொருள் வருமாறு அடைப்புக்குறிகளில் தந்துள்ளேன் - பிழையிருந்தால் அன்புடனே சுட்டிக் காட்டவும்)
* சுதா ரகுநாதன் பாடுவதை இங்கு கேட்கலாம்
** மகராஜாபுரம் சந்தானம் பாடுவது இங்கே!
*** எஸ். ஜானகி - K.V.மகாதேவன் இசையில் - "சப்தபதி" தெலுங்குத் திரைப்படம்
பல்லவி
மருகேலரா ஓ ராகவா
(ஓ ராகவனே, ஏன் என்னிடம் இருந்து மறைந்து கொள்கிறாய்?)
அனுபல்லவி
மருகேலர சரா சர ரூபா
(மறையும் பொருட்கள் நிறைந்த உலகிலும் ரூபமாக உள்ளவனே)
பராத்பர சூர்ய சுதாகர லோசன
(பரம்பொருளே, சூர்ய சந்திரர்களை விழிகளாகக் கொண்டவனே)
சரணம்
அன்னி நீவனுசு அந்த ரங்க முன
(எல்லாப் பொருளிலும் நீதான் என்று என் அந்தரங்கத்துக்கு உள்ளே)
தின்னக வேடகி தெலிசி கொண்டே னய்ய
(நன்றாக வேட்கைப்பட்டு தெரிந்து கொண்டேன் ஐயனே)
நின்னே கானி மடி நென்ன ஜால நொருல
(உன்னை அன்றி வேறு என் சிந்தனை வேறு இல்லை)
நன்னு ப்ரோவ வய்ய தியாக ராஜ னுத
(என்னைக் காத்து ரட்சி, தியாகராஜன் வணங்கும் தெய்வமே!)
ராகம்: ஜெயந்தஸ்ரீ
தாளம்: தேசாதி
குரல்:
* உன்னி கிருஷ்ணன் - தொகுப்பிசை(Fusion)
** உன்னி கிருஷ்ணன் - ஸ்ரீ குமரன் தம்பி இசையில் - "பந்துக்கள் சத்ருக்கள்", மலையாளத் திரைப்படம்
வாத்தியம்:
* துர்கா பிரசாத் - கோட்டு வாத்தியம்
என்ன நண்பர்களே, பாட்டு படிச்சீங்களா? புடிச்சு இருந்துச்சா?? :-)