ராகம் என்ன ராகம்?
கொஞ்சம் நீட்டி இழுத்துப் பாடினால் போதும்... ராகமா பாடறாங்கன்னு சொல்வதைப் பார்க்கலாம்! அப்பறம் இந்த பாட்டு, இந்த ராகம், அந்தப் பாட்டு, அந்த ராகம் ஏதேதோ சொல்லறாங்க! அனேக பேருக்கு இது புரியாத விளையாட்டு போல இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
ராகம் என்றால் என்ன? எப்படிக் கண்டு பிடிப்பது?
எளிமையா சொல்லணும்னா, ஸ,ரி,க,ம,ப,த,நி போன்ற ஸ்வரங்களை எந்த வரிசையில் ஒரு பாட்டின் இசை அமைப்பில் இருக்கிறதோ அதைப்பொறுத்து அதன் ராகம் அமைகிறது.
உதாரணத்திற்கு: ஸ ரி க ப நி ஸ என்றால் ஹம்சத்வனி,
ஸ ரி ம ப த ஸ என்றால் சுத்த சாவேரி
என்பதுபோல வருமென சொல்லலாம்!
தொடக்கத்தில் ஸ்வர வரிசைகளைக் கொண்டு இந்த ராகம் இதுவென்று சொல்வது கடினமானதுதான்.
எளிதான வழி ஏதும் இல்லையா?
எளிதான வழி, பல பாடல்களைக் கேட்பதுதான்... ஒரு ராகம் தெரிந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும்போது, இந்தப் பாடலும் அந்த பாடலின் ராகம்தான் என கண்டு கொள்வதுதான்!!!
இப்படி கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோம்ஸ் கதை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம். கண்டுபிடித்தை பின் கேட்பது அதிலும் ஆனந்தம்!
ஒரு சில ராகங்களை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க இயலாதென்றாலும், ஆரம்ப நிலையில் இந்த வழி நிச்சயம் கை கொடுக்கும்!
உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களைப் பார்ப்போமே!
முதலில் மனதை இளக வைக்கும் ஷ்யாமா(சாமா) ராகத்தில்
வருவரோ வரம் தருவாரோ....?
மனது சஞ்சலிக்குதையே....
எப்போது வருவரோ, வரம் தருவாரோ...?
என்ற கோபலகிருஷ்ண பாரதி பாடல், பாம்பே ஜெயஸ்ரீ பாடிட:
| Varuvaaro - Sama_A... |
இந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர், முற்றிலும் வேறுபட்ட இன்னொரு பாடலை வயலினில் வாசிக்க கேளுங்கள்:
முதலில் பல்லவி :
| Maanasa Sancharare... |
பின்னர் அதே பாடலின் முதல் சரணம் :
| Maanasa Sancharare... |
இரண்டு பாடல்களும் ஒரே சாயலில் இருப்பது தெரிகிறதா?
குறிப்பாக சரணம் கேட்கும்போது,
முதல் கேட்ட பாடலின் (வருவரோ வரம் தருவாரோ) சரணம் -
திருவாரூர், தென்புலியூர், திருச்சிற்றம்பல நாதர்
குருநாதராக வந்து குறை தீர்க்க கனவு கண்டேன்
நினைவுக்கு வருகிறதா?
இதைக் கண்டுபிடிக்க முடிந்தால் போதும், உங்களுக்கு இசை ஞானம் இருக்கிறது என்று உங்கள் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்!
இரண்டாவதாக கேட்ட பாடல் சதாசிவ பிரம்மேந்திரர் இயற்றிய,
மானச சஞ்சரரே
ப்ரஹ்மணீ மானச சஞ்சரரே
இரண்டாவது பாடலும் ஷ்யாமா ராகம்தான் என்று கண்டு கொள்ள இது போதாதா!
---------------------------------------------------------------------------------------------------
அடுத்ததாக, வராளி ராகத்தில்
கா வா வா கந்தா வா வா
என்னை கா வா வேலவா
என்ற பாபநாசம் சிவன் பாடலை தென்னிசைத் திலகம் சுதா ரகுநாதன் பாடக் கேட்கவும்:
இந்த பாடலின் சாயலில் இன்னொரு பாடல்:
மாமவ மீனாக்ஷி ராஜ மாதங்கி
என்று தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதர் பாடல்:
பாடலின் ஒரு பகுதியை வயலினில் லால்குடி ஜெயராமன் அவர்கள் வாசிக்கக் கேட்கலாம்:
| MAMAVAMEENAKSHI-VA... |
இந்தப் பாடலும் அமைந்திருப்பது வராளி ராகம் தான். வயலினில் மாமவ மீனாக்ஷி பாடலை வாசிக்க கேட்டாலும், உதடுகள் 'கா வா வா, கந்தா வா' என்று முணுமுணுக்கும் அதிசயம் இங்கே நடக்கப் பார்க்கலாம்!
---------------------------------------------------------------------------------------------------
மூன்றாவதாக, இன்னொரு ராகத்தையும் பார்ப்போம்:
இப்போது த்வஜாவந்தி ராகம்.
எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்...
எங்கு நான் செல்வேன் அய்யா?
என்ற பெரியசாமி தூரன் அவர்களின் பாடலில் ஒரு பகுதியை பாம்பே ஜெயஸ்ரீ பாடக் கேட்கலாம்:
| Engu Naan - Dwijaw... |
ஹிந்துஸ்தானியில் இருந்து கர்நாடக சங்கீதத்திற்கு வந்த இந்த ராகம், தமிழ் பாடல் வரிகளில் எப்படி மின்னுகிறது பாருங்கள்!
இந்த பாடலின் அதே சாயலில் அமைந்த இன்னொரு பாடல்:
அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்
ஆகம சம்பரதாய நிபுனே ஸ்ரீ
அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்
என்ற முத்துசாமி தீக்ஷிதர் பாடல், எம்.எஸ் அவர்களின் தெய்வீகக் குரலில்:
இந்த பாடலும் த்வஜாவந்தி ராகம்தான்!
இது வரை மூன்று ராகங்களும், ஒவ்வொன்றிலும் இரண்டு பாடல்களும் பார்த்தோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த ராகங்களின் மொத்த அம்சங்களையும் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. இது போல ஒரு சில பாடல்களில் தொடங்கி, அந்த ராகங்களில் ஏனைய பாடல்களையும் கேட்டு வந்தால், ராகங்களில் இதர குணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.