சினிமா காரம் "காப்பி" - பாகம் 2
அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே (டேய்!!! அடங்குடா!! )
சரி சரி!!!
அன்பார்ந்த வலையுலக நண்பர்களே (ஹ்ம்ம் !! அது!!)
போன பகுதியை பார்த்து,படித்து,பின்னூட்டங்கள் இட்ட அனைத்து அன்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
போன பகுதிக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்த பின்பு உங்களிடம் இந்த தலைப்பின் மேல் உள்ள ஆர்வமும்,அறிவும் கண்டுகொண்டேன். பல பேர் தனக்கு தெரிந்த இதர காபிகளையும், இன்ஸ்பிரேஷன் மற்றும் காபியில் உள்ள வேறுபாடு பற்றி தனக்கு தெரிந்த தெளிவான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்.
பெயர் என்னமோ காப்பின்னு வெச்சாலும் கூட போன தடவை பார்த்த உதாரணங்கள் எல்லாம் இன்ஸ்பிரேஷன் வகையை சார்ந்ததே தவிர,அவற்றை முழுமையான காபி என்று சொல்ல முடியாது. ஆனால் அது போன்ற ஈயடிச்சான் காபி வகையை சேர்ந்த சில பாடல்களை இந்த பகுதியில் காணலாம்.
S.A.ராஜ்குமார் :
ஆர்ப்பாட்டமே இல்லாமல் தமிழ் திரையுலகில் அமைதியாய் நுழைந்தவர் S.A.ராஜ்குமார். எல்லா பாட்டும் ஒரே மாதிரி இருக்கிறது,படத்தில் ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் வித்தியாசமே தெரியவில்லை என விமர்சனங்கள் இருந்தாலும் அமைதியான,ஆரவாரம் இல்லாத மெல்லிய பாடல்களை சத்தமில்லாமல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.(இந்த பதிவில் அவரின் ஒரு பாடலின் சுட்டியை தருவதற்கு பதிலாக,அதே படத்தின் இன்னொரு பாடலின் சுட்டியை முதலில் போட்டுவிட்டேன்!! அந்த அளவுக்கு அவரின் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கும்!! :-))
காபி அடிப்பதில் ஜாம்பவான்கள் சிலரின் (ஒருவரின்?!) மேலேயே மக்களின் கவனம் இருந்ததால்,இவரின் இசையில் காபிகள் உள்ளனவா என்பதை பற்றி எல்லாம் மக்கள் அவ்வளவாக கவனிக்கவில்லை. ஆனால் இவரின் மேல் உள்ள என் மதிப்பை புரட்டி போட்ட படம் "வானத்தை போலே". இந்த படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றன ஆனால் என் கவனத்தை பெற்ற ஒரு பாடல் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" எனும் பாடல்.
ஏன் என்று கேட்கிறீர்களா ?? ஏன் என்றால்,இது "Daag - the fire" எனப்படும் இந்தி திரைப்படத்தில் வரும் இந்த பாடலின் அச்சு அசல் காபி. இதை கேட்ட பின் அட பாவிகளா தேவா மட்டும் தான் இப்படி என்றால் அவருக்கு போட்டியாக ஒருவர் வந்துவிட்டாரே என்று நினைத்துக்கொண்டேன்.
இது கூட பரவாயில்லை ஆனால் "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற சொல்லை வேத வாக்காக எடுத்துக்கொண்டு இவர் பாகிஸ்தான் இசைக்குழுவின் ஒரு பாடலையும் சுட்ட கதை உண்டு.
என்னது??? பாகிஸ்தானா??? ஏன் காபி அடிக்க வேறு பாடலா கிடைக்கவில்லையா?? என்று தோன்றுகிறதா?
பாகிஸ்தானில் "ஜுனூன்" என்று ஒரு இசைக்குழு உண்டு. இவங்களுக்கும் நம்ம ஊருல மெகா சீரியல்களின் அட்டகாசங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்கன்னா,நீங்க பாட்டுக்கு எதாவது வெளி நாட்டு சதி இருக்குமோன்னு யோசிக்க ஆரம்பிச்சுராதீங்க!! :-)
அவர்களின் பாடல்கள் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் பெறும் புகழ் பெற்றவை. இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை வளர்க்கும் முயற்சிகள் நடந்த சமயத்தில் அவர்கள் இந்தியா வந்து மேடை கச்சேரிகள் செய்த கதைகள் எல்லாம் உண்டு.
அந்த குழுவின் "சய்யோனி" எனும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது!! சூஃபி இசை ரகத்தில் மேற்கத்திய இசையை அழகாக கலந்து ஒரு விதமான சோகத்தின் ஊடேயும் விறுவிறுப்பான மன நிலையை அளிக்கவல்ல அருமையான பாடல் அது. இசைக்கு மயங்காதோர் எவரும் உண்டோ என்பது போல் பாகிஸ்தானிய இசை திறமை பற்றி எனக்கு அறிமுகப்படுத்திய அழகான பாடல் அது. அருமையாக படப்பிடிப்பும் செய்யப்பட்டிருந்ததால் அந்த பாட்டு என்னை மிகவும் கவர்ந்திருந்தது. (நடுவில் வரும் கிதார் அலாபனை அற்புதம்!! :-))
சிறிதே தமிழ் திரை இசை பாணியில் மாற்றப்பட்டது போல் தெரிந்தாலும் "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தில் வரும் "மேகமாய் வந்து போகிறேன்" எனும் பாடலில் ஈயடிச்சான் காபி அடித்திருப்பார் S.A.ராஜ்குமார்
நீங்களே கேட்டு பாருங்களேன்!! :-)
S.A.ராஜ்குமார் "மேகமாய் வந்து போகிறேன்" : படம் "துள்ளாத மனமும் துள்ளும்"
Sayonee - Junoon
இதில் இன்னொரு தமாஷ் என்னவென்றால் இதே பாட்டை நம்ம தேவா சார் தனக்கே உரிய பாணியில் இன்னொரு முறை காபி அடித்திருப்பார்.
"கண்ணெதிரே தோன்றினாள்" எனும் திரைபடத்தில் வரும் "சலோமியா"
எனும் பாடலில் தான் இந்த கூத்து நடந்திருக்கும்!! :-)
தேவாவா கொக்கா?? :P
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா!!!
இப்பவே கண்ணை கட்டுதே,இதுக்கு மேல எழுதினா இந்த பதிவு தாங்காது. அடுத்து தேவாவை பற்றி வேற எழுத போறேன். அதனால அதை தனி பதிவாத்தான் ஆரம்பிச்சாகனும்!!!
அடுத்த காபி பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து நன்றியுடன் விடை பெறுவது,உங்கள் அன்பு சீவீஆர்!!
வரட்டா?? :-)