நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ? (நானாதி பதுக்கு நாடகமு)
எனக்கு இசை என்றாலே கொள்ளை பிரியம். சமீபத்தில் ஒரு நாதஸ்வர இசை தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதில் "நானாடி பதுக்கு" எனும் அன்னமாச்சாரியா கீர்த்தனையை கேட்டு மெய் மறந்து போய் விட்டேன். அதை கேட்ட பின் முன்பு எப்பொழுதோ எம்.எஸ்ஸின் தெய்வீக குரலில் இந்த பாட்டை கேட்ட ஞாபகம் வந்து விட்டது.
கே.ஆர்.எஸ் அண்ணாவின் கருணையால் இணையத்தில் அதற்கான ஒலிப்பேழை கிடைத்தது. அதை திரும்ப திரும்ப கேட்க கேட்க இவ்வளவு அழகான பாடலை நம் இனிய தமிழில் கேட்டால் என்ன என்று தோன்றியது!!! எனக்கு தெரிந்து இந்த பாட்டிற்கு தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கிறதா என்று தெரியாது. அதுவுமில்லாமல் எனக்கு தெலுங்கு வேறு தெலுசு லேது!! :-(
என்ன செய்வது????
சகலாகலா வல்லவர் கே.ஆர்.எஸ் அண்ணாவையே திரும்பவும் துணைக்கழைத்தேன். எனக்காக மெனக்கெட்டு இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொடுத்தார். அதை பார்த்ததில் இருந்து மனதில் ஒரே குஷி. வீட்டிற்கு வந்ததில் இருந்து வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை திரும்ப திரும்பக்கேட்டு கீர்த்தனையில் மூழ்கியே போய் விட்டேன்.
அந்த மூடில் பிறந்தது தான் கீழே நீங்கள் பார்க்கும் அடியேனின் மொழிபெயர்ப்பு. பாடுவதற்கு வசதியாகவும் அதே சமயம் பொருளுக்கு பொருந்தியும் இருக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து எழுதியதால் ஆங்காங்கே வட மொழி சொற்கள் வருவதையும்,வேறு சில விட்டுக்கொடுக்கல்களையும் தவிர்க்க முடியவில்லை (Some compromises had to be made).
வரிகளை படிக்கும் போது எம்.எஸ்ஸின் இந்த ஒலி கோப்பை கேட்டுக்கொண்டே படித்தால்,கீர்த்தனையின் சுவையை ரசிக்கலாம்.
பாம்பே சகோதரிகளின் குரலில் அமைந்த ஒலிப்பேழையும் உங்களுக்காக உண்டு!!
பாட்டில் இரண்டாவது பத்தி ஒலிப்பேழையில் பாடப்படவில்லை என்பதால் பாட்டு கேக்கும்போது அதை ஒதுக்கிவிட்டு மூன்றாவது பத்திக்கு நேரடியாக தாவி விடுங்கள்!! :-)
ராகம் : ரேவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : அன்னமாச்சாரியா
நம் வாழ்க்கை தினமும்,நாடகமோ?
கண்களில் மறைவது பேரின்பமோ!!
பிறப்பது நிஜமோ,போவதும் நிஜமோ
நடுவினில் நம் பணி நாடகமோ??
எதிரினில் விரிவது, பிரபஞ்சமோ
கடைசியில் கை சேரும் பேரின்பமோ
உண்ணும் உணவும்,உடுத்திடும் உடையும்
இதன் இடை இவண் பணி நாடகமோ!!??
இதில் தோன்றும, இடர் தரும் உபயகர்மங்களும்
இவை தாண்டி இறை சேர்ந்தால்,பேரின்பமோ
தங்கும் பாவமும்,தீராத புண்யமும்
நகைக்கிற காலமும் நாடகமோ
எங்கும் நிறை ஸ்ரீ வேங்கடேஸ்வரனை அன்றி
எது தரும் குறைவில்லா,பேரின்பமோ.