Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

Showing posts with label மாடு மேய்க்கும் கண்ணே. Show all posts
Showing posts with label மாடு மேய்க்கும் கண்ணே. Show all posts

Tuesday, April 24, 2007

நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்?

"நாட்டுப்புறப் பாடல்-ன்னா என்ன சார் அத்தனை இளக்காரம்? நையாண்டி உங்களுக்கு??"
- எந்தப் படம்? நினைவுக்கு வருகிறதா? ...... சிந்து பைரவியில் நம்ம சிந்து, ஜேகேபி கிட்ட பொங்கி எழுவாங்க! :-)

நாட்டுப் பாடல்களில் என்ன சார் இல்ல? அதுல சொல்லப் படாத கருத்துக்களா? வெளிப்படுத்தாத உணர்ச்சிகளா?
வீரம், விவேகம், கோபம், ஹாஸ்யம் எது சார் இல்ல?
-இதுவும் அதே படத்து டயலாக் தான்!

அண்மையில் ஒரு அருமையான நாட்டுப் பாடல் கிடைத்தது!
அது காவடிச் சிந்து மெட்டில் அமைந்திருந்தது!
பொதுவா காவடி-ன்னாலே அது முருகனுக்குத் தான்!
ஆனா பாருங்க, இங்குக் கண்ணனுக்குக் காவடிச் சிந்து!
"மாடு மேய்க்கும் கண்ணே - போக வேண்டாம் சொன்னேன்" என்ற பாட்டு.
கண்ணபிரானுக்கு காவடி டோய்! :-)



அதாச்சும் சிந்து என்பது நடைப்பாடல்.
பயணத்தின் போதோ, பயணத்துக்கு முன்னரோ உற்சாகம் பற்றிக் கொள்வதற்காகப் பாடுவது! தாளம் எல்லாம் தனியா எதுவும் போட வேண்டாம்! பாட்டில் தானா வந்து விடும்!
காவடி எடுத்துப் பயணம் போகும் போது பாடுவது காவடிச் சிந்து!

பெரும்பாலும் செஞ்சுருட்டி ராகத்தில் பாடுவார்கள். நாட்டக்குறிஞ்சி ராகமும் உண்டு! காவடிச் சிந்து, அதைப் பற்றிய குறிப்புகள், அண்ணாமலை ரெட்டியார் போன்ற தகவல்களை எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இன்று, நேரடியா செவிக்கு விருந்து!

ஒரு தாய்க்கும், குட்டி மகனுக்கும் டிஸ்கஷன் நடக்கிறது. (உரையாடல்)
டேய் மவனே...வெளியில போவாதடா...எத்தனை வாட்டிடா சொல்லறது!
போம்மா...நீ எப்பவும் இப்படித் தான்! வெளியில ஒண்ணும் ஆவாது! எல்லாம் நான் பாத்துக்கறேன். ஆனா அப்பா கேட்டா மட்டும் சமாளிச்சுக்கோ! :-)

அருணா சாய்ராம், மார்கழி மகோற்சவத்தில் அதைப் பாடினார். நீங்களே கேளுங்கள்! உங்களுக்கும் மிகவும் பிடிக்கும்!


பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------
ராகம்=குறிஞ்சி
தாளம்=?
வரிகள்=அனானிமஸ் :-)
குரல்=அருணா சாயிராம்
வீடியோவிற்கு நன்றி=adomac


இந்தப் பதிவைக், காலஞ்சென்ற என் பாட்டி (ஆயா என்று அழைப்போம்)
திருமதி ஜனகவல்லி அம்மாள் நினைவுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.


அவர் வாழைப்பந்தல் கிராமத்தில் பாடாத நாட்டுப் பாடல்களா?

இராமாயாணக் கதையை முழுக்கவும் நாட்டுப் பாடலில் பாடி விடுவாரே!
அதுவும் பொங்கல் கும்மியின் போது, மொத்த உரே முற்றத்துக்கு வந்து கும்மிப் பாட்டுக்கு ஆடுமே! சிறு வயதில் அவரைப் பாடச் சொல்லி, TDK-90 காசெட் டேப்பில் பதிந்தவற்றை எல்லாம் சிடியாக்கணும்!