என் இனிய தமிழ் மக்களே!!
அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக்கிட்டு (இல்ல பிடுங்கறா மாதிரி நடிச்சிக்கிட்டு) எல்லோரும் ரொம்ப சோர்வா இருப்பீங்க. இந்த சோர்வுக்கு இளைப்பார ஒரு காபி குடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?? உங்களுக்கு எல்லாம் காபி தரலாம்னு எனக்கும் ஆசைதான் ,ஆனா தொழில்நுட்பம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை,நான் என்ன பண்றது :-(
சரி காபி தான் கொடுக்க மாட்டேங்குற ,காபி ராகம் பத்திய பதிவா இது அப்படின்னு கேக்கறீங்களா??
சிந்து பைரவி பட பாட்டுல வரா மாதிரி நாமலும் "என்னமோ ராகம்,என்னென்னமோ தாளம்,தலைய ஆட்டும் புரியாத கூட்டம்" தான்,அதனால நீங்க பயப்படாதீங்க.
நம்ம தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளர்கள் செய்யும் காபிகள் பத்தி தான் இந்த பதிவு.
காபி அடிக்கரதுலையே பலவிதங்கள் இருக்குங்க!! நாம அன்றாடம் பல பேர்களை பார்க்கிறோம்,பல விஷயங்களை கேட்கிறோம்,படிக்கிறோம். இவற்றின் பாதிப்பு நாம் செய்யும் பல செயல்களில் நம்மையும் அறியாமல் புகுந்து விடுவது தவிர்க்கமுடியாதது. அதுவும் பெரும் புகழ் வாய்ந்த இசை அமைப்பாளர் என்றால் நிலைமை ரொம்ப கஷ்டம். தங்கள் துறையில் அவ்வப்போது வெளிவரும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டு தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக பல வகை இசை தொகுப்புகளை கேட்பது எந்த ஒரு இசை அமைப்பாளரும் செய்யும் விஷயம்.
பல படங்களில் ஒப்பந்தமாகி தயாரிப்பாளரும்,இயக்குனரும் எனக்கு இந்த மாதிரி இசை வேண்டும்,அந்த மாதிரி மெட்டு வேண்டும் என்று நெருக்குதல் தரும் போது முன் எப்போவோ கேட்ட பாதிப்பில் இசை அமைப்பது புரிந்துக்கொள்ள கூடியது தான். ஆங்கிலத்தில் இந்த் விதமான இசை அமைப்புகளை "Inspired" என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இசைகளை அமைப்பதிலும் திறமையும் உழைப்பும் தேவை என்பதால் இதை கூட மன்னிச்சு விட்டு விடலாம். ஆனால் சில பேர் ஈயடிச்சான் காபி அடிப்பார்கள் பாருங்கள். அதை தான் பொருத்துக்கொள்ளவே முடியாது.அதுவும் சில பேர் அப்படி காபியும் அடித்து விட்டு அதை தான் மிக கஷ்டப்பட்டு உருவாக்கியது போல் பேசும் போது எரிச்சலாக வரும். இன்னும் சில பேர் இருப்பதையும் கேவலப்படுத்துவதை போல் சொதப்பிவிடுவார்கள் பாருங்கள்,அதையெல்லாம் என்னவென்று சொல்ல??
இந்த பதிவில் நமக்கு தெரிந்த சில காபிகள் பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்.
எம்.எஸ்,விஸ்வனாதன்:
தமிழ் திரையுலகில் மெல்லிசை என்றால் என்ன என்பதை எல்லோருக்கும் அறிமுகபடுத்தியவர்களே மெல்லிசை மன்னர்களான விஸ்வனாதன் ராமமூர்த்தி தான். அதற்கு முன் இருந்த திரை இசை பெரும்பாலும் கர்நாடக சங்கீதத்தையே சார்ந்திருந்தது. இப்பொழுது பெரிதும் பேசப்படும் கலந்திசை (fusion music) இன் முன்னோடிகள் அவர்கள்தான். மேற்கத்திய இசை பாணிகளை லகுவாக இந்திய இசையுடன் கலந்து இனிமையான பாடல்களை நமது செவிகளுக்கு விருந்தாக படைத்தவர்கள். அவர்கள் படைத்த பல பாடல்கள் காலத்தை கடந்து நம் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.
எம்.எஸ்.விஸ்வனாதன் இசை அமைப்பில் எனக்கு பல பாடல்கள் பிடித்திருந்தாலும் எனக்கு பெரிதும் பிடித்த ஒரு பாடல் "புதிய பறவை" படத்தில் வரும் "பார்த்த நியாபகம் இல்லையோ" என்கிற பாடல். அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நான் அப்படியே உருகி விடுவேன். ஒரு விதமான "mystic" உணர்வை வெகு அழகாக வெளி கொணர்ந்திருப்பார் இசை அமைப்பாளர். பாடலை பாடிய விதமும்,அதை படம் பிடித்திருக்கும் விதமும் வெகு அற்புதமாக அமைந்திருக்கும்.
அனால் இந்த பாடலில் "SwayWithMe-DeanMartin" என்ற மேற்கத்திய பாட்டு ஒன்றின் சாயல் இருப்பதை சமீபத்தில் அறிந்தேன். "inspired" என்ற சொல்லுக்கு மிக அற்புதமான சான்றாக இந்த பாடலை கொள்ளலாம். கர்நாடக இசையோடு மேற்கத்திய இசையை கலந்து பரிசோதனை நடந்து வந்த காலத்தில் இப்படிப்பட்ட சாயல்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான். மக்களுக்கு புதிய பரிமாணங்களை அளிக்க வேண்டும் என்ற இசை அமைப்பாளரின் எண்ணத்தை பாராட்டத்தோன்றுகிறதே தவிர,இதை குறை கூற தோன்ற வில்லை.
இது ஒன்றும் அச்சு அசலாக காபி அடிக்கப்பட்ட பாட்டு இல்லை என்றாலும் இசை பாதிப்புகள் என்பது எல்லா நேரங்களிலும் நடந்திருக்கிறது,இது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல என்பதை விளக்கவே இந்த பாடலை இந்த பதிவில் சேர்த்திருக்கிறேன். ஆனால் இந்த பாடலை முதலில் கேட்டால் இது காபி என்று கூட சொல்ல முடியாது,உன்னிப்பாக கேட்டால் தான் இதன் பாதிப்பை புரிந்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இதை மிக நேர்த்தியாக மற்றி இருக்கிறார் இசை அமைப்பாளர்.குறிப்பாக 1:40 நிமிடத்தில் வரும் இசை சிறிது காட்டிகொடுக்கலாம். :-)
எம்.எஸ்.விசுவனாதன் "பார்த்த நியாபம் இல்லையோ" : படம் "புதிய பறவை"
SwayWithMe-DeanMartinஇசைஞானி இளையராஜா:மெல்லிசை என்னவென்று சொன்னவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்றால் தமிழ் திரை இசையில் மெல்லிசையை அரியாசனம் போட்டு நீங்காத இடம் பிடிக்கச்செய்தவர் இசைஞானி இளையராஜா என்று சொல்லலாம். இவரை பற்றி சொல்ல கொஞ்ச நஞ்சம் கிடையாது,தமிழ் திரை இசை இப்போது இருக்கும் நிலைக்கு ஒரு "Godfather" ஆக திகழ்பவர் இளையராஜா அவர்கள்.இவரின் இசையிலும் "inspired" ரகங்களே உண்டே தவிர ஈயடிச்சான் காபி இருக்காது. உன்னிப்பாக கேட்டாலே ஒழிய இவரின் பாடல்களிலும் பாதிப்புகளை உணர முடியாது.
"ஒரு கைதியின் டைரி" படத்தில் "ABC நீ வாசி" என்று ஒரு பாடல். மிக அழகான மெல்லிசை. காதலர்களின் குறும்பும்,ஊடலும்,பொய்க்கோப பூக்களும் அழகாக கொப்பளிக்கும் இந்த பாடலில்.
இந்த பாடல் ஒரு பிரென்சு சிம்பனி இசையின் பாதிப்பில் அமைந்ததாக ஒரு கருத்து உண்டு. பாடலை கேட்டு நீங்களே சொல்லுங்களேன்!! :-)
இசைஞானி இளையராஜா "ABC நீ வாசி" : படம் "ஒரு கைதியின் டைரி"L'Arlésienne Suite No.1-Carillonபி கு : ஒரு சுவாரஸ்யமான விஷயம் "தம்பிக்கு எந்த ஊரு" படத்தில் வரும் "என் வாழ்விலே" பாடலின் நடுவில் வரும் இசையும் "மூன்றாம் பிறை" படத்தில் "பூங்காற்று புதிரானது" பாடலின் நடுவில் வரும் இசையும் (ஸ்ரீதேவி ரயில் தடத்தில் மாட்டிகொள்லும் காட்சியில் வரும் இசை) ஒரே மாதிரி இருக்கும். இப்படி அச்சு அசலாக ஏன் இளையராஜா இசை அமைத்தார் என்று நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு.
ஏ.ஆர்.ரகுமான்:
தமிழ் திரை இசையை நாடு முழுக்க கேட்க வைத்த இசை அமைப்பாளர்.தமிழ் திரை பாடல்களை உலகம் முழுதும் கவனிக்க வைத்தவர் என்றால் அது மிகையாகாது. இந்திய இசையில் மேற்கத்திய இசையை பெரிதும் புகுத்தி புரட்சி செயதவர்.நிறைய புதுப்புது விஷயங்களாய் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற துடிப்பினால் இவரிடமும் வெளிநாட்டு இசையின் பாதிப்புகளை பார்க்கலாம். இவரின் பாடல்கள் சிலவற்றில் தாளங்கள் (beats) முழுவதுமாக வெளிநாட்டு இசையிலிருந்து சுட்டவையாக இருக்க பார்க்கிறோம்.உதாரணத்திற்கு "அக்கடான்னு நாங்க உடை போட்டா",படம்
: இந்தியன் (Love of common people), "தென்மேற்கு பருவ காற்று",படம் : கருத்தம்மா ( Om we rembwe ike0). ஆனால் பாடலின் மெட்டுக்கள் எனக்கு தெரிந்த வரை சொந்த சரக்காகத்தான் இருக்கும்.
இந்தியன் படம் மிக அருமையான பாடல்கள் பலவற்றை கொண்ட படம். அதில் 'டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா??" எனறொரு பாடல். ஆஸ்திரேலியாவில் மிக அழகாக படமாக்கப்பட்ட பாடல்,இந்த பாடலில் "Ace of the base:All that she wants" என்ற ஒரு ஆங்கில பாட்டின் தாக்கம் உள்ளது என்று என் நண்பன் சொன்ன போது நான் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பொழுதெல்லாம் எனக்கு ரகுமான் இசை என்றால் ஒரு பைத்தியம்,அதனால் பிடிவாதமாக நம்ப மறுத்தேன். பிறகு அந்த பாடலை கேட்ட பின் தான் புரிந்தது.
நீங்களும் கேட்டு பாருங்களேன்,பாடல் நன்றாகத்தான் இருக்கும். பாடலை முழுவதுமாக கேட்க பொறுமை இல்லை என்றால் ஆங்கில பாட்டில் குறிப்பாக 2:14 நிமிடத்தில் இருந்து கேட்டு பாருங்கள்!! :-)
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் "டெலிஃபோன் மணி போல்" : படம் :"இந்தியன்"
Ace of the base : All that she wants
---காபிகள் தொடரும்
நன்றி : http://www.itwofs.com/