கணேச கானங்கள்
சில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.
ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்ப்டித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன்.
ஆதாலால், வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன்.
பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.
பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா.
வாதாபி கணபதிம் - நித்யஸ்ரீ மஹாதேவன்
இந்த பாடலில், தீக்ஷிதர், 'ஹம்சத்வனி ஹே பூஷித ரம்பம்...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!
தமிழில் பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் கணபதி துதிப் பாடலாகும்.
சுதா ரகுநாதன் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:
|
ஹம்சத்வனி ராகம் கல்யாணி ராகத்தைப்போல் மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!
கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.
|
'காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ' பாடலில் ஒரு வரி வரும்... 'இசையின் பயனே இறைவன் தானே' என்று. இசையின் பயன் மட்டுமல்ல.. இசையே அவன் அருளால்தான்!