Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

Showing posts with label வீணை. Show all posts
Showing posts with label வீணை. Show all posts

Thursday, June 07, 2007

நல்லதோர் வீணை செய்தே

மன்னன் படத்தில் "அம்மா என்றழைக்காத" என்று ஒரு பாடல் (அது எப்படியோ இசைக்கருவியை பற்றிய பதிவு வந்தாலே தலைவர் பாட்டு என்னை அறியாமல் நுழைந்து விடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தமான பாடல இது்.


Get Your Own Music Player at Music Plugin

இந்த பாட்டின் தொடக்கத்தை கேட்டாலே மெய் மறந்து போய்விடும்!! மனதில் எந்த ஒரு எண்ணம் இருந்தாலும் அதையெல்லாம் ஓட ஓட விரட்டிவிட்டு மனதை சாத்வீகப்படுத்தி முழு பாடலையும் கேட்க ஓரிரு மணித்துளிகளில் நம்மை தயார்செய்துவிடும் அந்த இசை. அதன் பிறகு யேசுதாஸின் குரலே ஒன்றே போதும்.இப்படிப்பட்ட தெய்வீகமான இசையை வீணையை தவிர்த்து வேறு எந்த இசைக்கருவியால் தர முடியும்??ஆமாம் அப்படிப்பட்ட உன்னதமான இசையை அளிக்கவல்ல வீணையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
நம் கர்நாடக சங்கீதத்தில் மிக உயரிய இடத்தை பிடித்து வைத்திருக்கும் இசைக்கருவி வீணை. வீணையின் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் இந்திய கலாசாரத்தில் வீணையின் குறிப்புகள் வெகு ஆரம்ப காலத்தில் இருந்தே உண்டு. ராமாயண காலத்தில் பார்த்தோமேயென்றால் இலங்கேசுவரனான இராவணன் மிக தேர்ந்த வீணை இசை கலைஞன் என கூற கேட்டிருக்கிறோம். ஆனால் முன் காலத்தில் தந்தியுடன் கூட இருக்கும் எந்த இசைக்கருவியாக இருந்தாலும் அதை வீணை என கூப்பிடுவார்கள். நாம் இப்பொழுது காணும் வீணையின் வடிவில் அவை இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இப்பொழுதிருக்கும் வீணையின் வித்து ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னமே போடப்பட்டு விட்டது என்பது திண்ணம்.
இப்பொழுது பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை பதினாறாவது நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கோவிந்த தீட்சிதர் என்பவரால் ரகுனாத மேல வீணை எனும் வீணையின் குறிப்பு "சங்கீத சுதா" எனும் ஏட்டில் இருப்பதாக தெரிகிறது. அந்த வீணையில் இருந்துதான் இன்று நாம் உபயோகிக்கும் சரஸ்வதி வீணை மருவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ரவி வர்மாவின் ஓவியங்களில் கூட இந்த வீணை இடம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.
சரி இவ்வளவு பழமையான வீணையின் வடிவமைப்பை கொஞ்சம் பார்க்கலாமா??

வீணையில் பல விதங்கள் இருந்தாலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை சுமார் நான்கு அடி நீளமாக இருக்கும்.வீணையின் வடிவை தாங்கி நிறபது இதன் தண்டி.வீணையை செய்வதற்கு பலா மர வகையை சார்ந்த கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இசை இவ்வளவு இனிமையாக இருக்கிறதோ என்னமோ.ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாந்த வீணை என்று பெயர் உண்டு.
தண்டியின் ஒரு ஓரத்தில் காலியான குடம் போன்ற அமைப்பு உண்டு.இந்த குடத்தில் ஏற்படும் அதிர்வினால்தான் இசையே உருவாகிறது. தண்டியின் இன்னொரு புறம் யாளி முகம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பகுதியில் ஒரு சிறிய குடமும் உண்டு. இது பெரும்பாலும் வீணையை தொடையில் தாங்கி இருத்திக்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.தண்டியின் மேலிருந்து கீழ் வரை பித்தளையால் செய்யப்பட்ட 24 மெட்டுக்கள்,ஒரு வகை மெழுகுப்பொருளினால் பொருத்தப்பட்டிருக்கும்.இந்த மெட்டுகளை பார்த்தால் எனக்கு தாயக்கட்டைகள் தான் ஞாபகம் வருகிறது. இவற்றின் மேல்தான் வீணையின் 7 தந்திகள் படர்ந்திருக்கும். வீணையின் பல நுணுக்கமான வடிவமைப்புகள் பற்றி நிறைய சொல்லலாம்,ஆனால் அதை பற்றி எழுதுவதற்கு எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ ,ஆனால் அதை படிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.அதனால் நாம் பதிவின் அடுத்த பகுதிக்கு போகலாம்.

இந்த வீணையை தரையில் உட்கார்ந்து கொண்டு,பெரிய குடத்தை வலது பக்கம் தரையில் இருத்தி,யாளி முக பக்கம் இருக்கும் குடத்தை இடது பக்கத்தொடையின் மேல் பொருத்திக்கொள்வார்கள்.
தந்திகளை வலது கையினால் மீட்ட வேண்டும். வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரலை கொண்டு 7 தந்திகளில் வாசிப்பு தந்திகள் எனப்படும் 4 தந்திகளை மட்டும் கீழ்நோக்கி மீட்டி வாசிப்பார்கள்.மற்ற மூன்று தந்திகளான தாள-சுருதி தந்திகளை வலது கையின் சுண்டு விரலை கொண்டு மேற்புரம் நோக்கி மீட்டுவார்கள்.
பலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக்கொண்டு மீட்டுவார்கள் (இல்லையென்றால் விரல் என்னத்துகாகறது),ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள்.
இடது கையின் விரல்கள் எல்லாம் தந்தியின் மேல் அழுத்தம் கொடுத்து இசையை மாற்ற பயன்படும். இதை சொல்லும்போதே கண்ணைகட்டுகிறதே,இதை நீண்ட நேரம் தாங்கிக்கொண்டு வாசித்தால் காலிலும்,முதுகிலும்,விரல்களிலும் எவ்வளவு வலி ஏற்படும் என்று வாசிப்பவர்கள் தான் கூற முடியும்!! லேசுப்பட்ட விஷயம் இல்லை!!! :-)
நமக்கு வீணை என்றாலே நினைவுக்கு வருவது சரஸ்வதி வீணை என்ற வகை வீணை தான். நான் மேலே சொன்ன குறிப்புகள் கூட சரஸ்வதி வீணையை பற்றியதுதான், ஏனென்றால் இப்போதைக்கு மிக பரவலாக உபயோகப்படுத்தப்படுவது இந்த வகை வீணைகள் தான். ஆனால் வீணையில் வேறு ரகங்களும்் கூட உண்டு.அவற்றில் முக்கியமான சில வகைகள் பற்றி சிறிது பார்ப்போமா??


ருத்ர வீணை:
வீணையின் வகைகளில் நாம் முதலில் பார்க்க போவது ருத்ர வீணை. இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-))்
இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த ்இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.


விசித்திர வீணை:
இதுவும் பார்க்க கொஞ்சம் ருத்ர வீணை போலவே தான் இருக்கிறது இல்லையா?? இந்த வீணையிலும் இரு புறமும் காய்ந்து போன பூசனிக்காய்களை பொருத்தி இருப்பார்கள். ஆனால் ருத்ர வீணையை போல இது ஒன்றும் பழமையான இசைக்கருவி அல்ல. இந்த வீணைக்கும் ருத்ர வீணைக்கு உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் இந்த வீணையில் மெட்டுகளே கிடையாது. அதுவும் தவிர இந்த வீணையை வாசிக்கும் விதத்திலும் சிறிது விசித்திரம் உண்டு. வலது கை விரல்களால் தந்திகளை மீட்டியபடி இடது கையில் ஒரு விதமான தட்டையான மீட்டுக்கோளை பயன்படுத்தி தேய்த்து தேய்த்து வாசிப்பார்கள். இந்த வீணையும் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தபடுவதில்லை. அதனால் வீணை உலகில் முடி சூடா ராணியாக சரஸ்வதி வீணையை நாம் எண்ணிக்கொள்ளலாம்.


கோட்டுவாத்தியம்:
இந்த வகை வீணைக்கு சித்திர வீணை என்றும்,மஹாநாடக வீணை என்று பல பெயர்கள். பார்ப்பதற்கு இது சரஸ்வதி வீணையை போலத்தான் இருக்கும். ஆனால் இந்த வீணையில் என்ன வித்தியாசம் என்றால் இதில் மொத்தம் 21 தந்திகள் உண்டு!! (யெப்பா!!) அதுவும் ஒவ்வொன்றும் மிக தடிமனானவை.இந்த வீணையை விசித்திர வீணையை வாசிப்பது போலவே இடது கையால் ஒரு விதமான தட்டையான மீட்டுகோளை வைத்து ஒலி எழுப்புவார்கள். வலது கையால் தந்திகளை மீட்டுவார்கள்.
இந்த வீணையில் உள்ள இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால்,இதில் கூட விசித்திர வீணையை போல் மெட்டுக்கள் கிடையாது.இந்த வீணையின் வரலாறு ஒன்றும் பெரியது அல்ல,சுமார் 100 வருடங்களாக தான் இது புழங்கி வருவதாக கூறப்படுகிறது.திருவிடைமருதூர் சகாராம் என்பவரால் இது முதல் முதலாக பிரபலப்படுத்தப்பட்டது,பின் மைசூர் சமஸ்தானத்தில் அரண்மனை இசைகலைஞரான நாராயண ஐயங்கார் என்பவரால் இது மேலும் மக்களால் அறியப்பட்டது.ரவிகிரண் போன்ற புகழ்பெற்ற இசைகலைஞர்களால் இந்த விதமான வீணையின் நாதத்தை இன்றும் இசை உலகில் கேட்க முடிகிறது

வீணை நம் நாட்டின் கலாசாரத்தையும் ,பாரம்பரியத்தையும் குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. படிப்புக்கு அதிபதியான கலைவாணியின் கையில் வீணையை கொடுத்திலேயே அதற்கு நம் மக்கள் எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல கர்நாடக இசை உலகில் வீணைக்கு என்று ஒரு தனி மரியாதைக்குரிய இடம் எப்பொழுதும் உண்டு.
அதுவும் இல்லாம நம்ம அப்துல் கலாம்,KRS,துர்கா அக்கா(:P) மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீணை வாசிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க!! இது மாதிரி வீணையின் சிறப்பை எல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம்.

பதிவும் பெருசாகிட்டே போய்ட்ருக்கு. போன தடவை மாதிரி பதிவு எழுதிட்டு ரொம்ப பெருசாகிடுச்சுன்னு யாரும் படிக்காம போயிட போறாங்க!! அதனால நான் மொக்கையை நிறுத்திக்கிட்டு கடையை கட்டுறேன். போறதுக்கு முன்னாடி ஒரு அருமையான வீணை இசைப்படத்தை போட்டிருக்கேன். இருக்கற வெயிலுக்கு இதமா வீணை இசை இன்பத்துல நனைஞ்சிட்டு போங்க.
வரட்டா?? :-)



References :
http://en.wikipedia.org/wiki/Veena
http://www.sawf.org/music/interviews/veena/veena.asp?pn=Music
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.B1.E0.AF.81
http://en.wikipedia.org/wiki/Rudra_veena
http://www.buckinghammusic.com/veena/veena.html
http://www.indian-instruments.com/stringed_instruments/rudra_vina.htm
http://www.dhrupad.info/rudraveena.htm
http://en.wikipedia.org/wiki/Image:Femme_Vina.jpg
www.beenkar.com/.../RudraVeenaSmallSuvir.jpg
http://www.geocities.com/Vienna/Stage/2225/pictures/ravikiran.jpg
http://www.chandrakantha.com/articles/indian_music/gotuvadyam.html
மற்றும் சில