கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம்
மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா
நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா
ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே.ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை
ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன்
ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் 'தர்பாரி' கனடா எனப் பெயர் பெற்றது போலும்.
சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு. உங்களுக்கு தெரிந்தவற்றை எடுத்து விடுங்களேன்...!
சென்ற பகுதியில் பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்து கொண்ட 'ஜங்கார ஸ்ருதி செய்குவாய், சிவ வீணையில்' என்கிற பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குவோம். எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த இந்தப்பாடலை இங்கு கேட்கலாம். 'ஜங்கார...' இன்று இழுக்கும் இடத்தில், பூர்விகல்யாணி அருவியில் மேலிருந்து கேழே விழுவதைப் போன்றதொரு உணர்வினைப் பெறலாம்!. 'நீ மாடலு' என்கிற பூர்விகல்யாணி கீர்த்தனையும் இந்தப் பாடலின் சாயலில் இருக்கிறது. இது பரதநாட்டியத்தில் ஜவளியாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
பூர்வி கல்யாணியில் இதர கிருதிகள்/கீர்த்தனைகள்:
* நின்னுவின - சியாமா சாஸ்திரி
Dr.N.ரமணி அவர்களின் புல்லாங்குழலில் இந்த பாடலை இங்கு கேட்கலாம். இந்தப் பாடலில் காஞ்சி ஏகாம்பரநாதர் / காமாட்சி பற்றிய குறிப்பும் உண்டு.
* மொய்யார் தடம் - மாணிக்கவாசகர்
பூர்வி கல்யாணி ராகத்தில் இந்த திருவெம்பாவை பாடலுக்கு பண்ணேற்றி - குறிப்பாக செம்மங்குடி அவர்களும் எம்.எஸ் அம்மா அவர்களும் பாடி இருக்கிறார்கள்.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழற்போற் செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
இந்த மார்கழி மாதத்திற்கு பொருத்தமான இந்த திருப்பள்ளிஎழுச்சியை எம்.எஸ் அம்மா பாடிட இங்கே கேட்கலாம்.
* பரதெய்வம் உனையன்றி - பாபநாசம் சிவன்
இந்தக் கிருதியின் ஆலாபனையும் பின்னர் அதை வயலினில் இசைத்திடவும் கேட்கலாம். பூர்வி கல்யாணியின் இனிமையை இதில் இனிதே நுகரலாம்:
இது 53ஆவது மேளகர்த்தா ராகமாகிய கமனாச்ரமவின் ஜன்ய ராகம்.
இதே ராகம் முத்துசாமி தீக்ஷிதர் பாராம்பரியத்தில் கமகக்கிரியா என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் பிரயோகத்தில் சற்றே வேறுபடும் என்று சொல்வாரும் உண்டு. இந்த ராகத்தினை பூர்வ கல்யாணி என்றும் பூரிகல்யாணி என்ற பெயரில் வழங்குவாரும் உண்டு!.
முன்பொருநாள் அலவலக நண்பர் ஒருவர் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை மின் அஞ்சலில் அறிவித்திருந்தார். என்ன பெயர் வைத்திருக்கிறார் என்ற கேட்டபோது மின் அஞ்சலில் 'Purvi' என்றார். எனக்கோ பெயரின் பொருள் புரியவில்லை. அவரிடம் பொருள் கேட்டபோது - இது ஒரு ராகத்தின் பெயர் என்று வேறு சொல்கிறார். அப்போதுதான் ஹிந்துஸ்தானியில் 'பூர்வி' என்றொரு ராகம் இருப்பதாகத் தெரிய வந்தது! (இந்த ராகம் கர்நாடக சங்கீத முறையில் ராகம் 'கர்மவர்தினி'க்கு சமானமாகும்).
இராக சஞ்சாரங்கள்:
கமதஸ் - பதபஸ் - நிதமக - தமகரி போன்றவை.
கீழ் ஸ்தாயில் இருந்து தொடங்குவது இந்த ராகத்தில்் இயற்றப்பட்ட பாடல்களுக்கு வழக்கமாகவும் இருந்திருக்கிறது. உதாரணம் : நின்னேகோரி (வர்ணம் - சொண்டி வெங்கடசுப்பய்யா) மற்றும் காரணம் கேட்டு வாடி (கோபாலகிருஷ்ண பாரதி)
இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் சில இங்கே:
* எக்கலாத்திலும் உனைமறவா - திருவாரூர் ராமசாமிப்பிள்ளை நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட இந்தக் கிருதியை இங்கு கேட்கலாம். இது அன்னை மீனாட்சியைப் பாடும் கிருதி.
* ஆனந்த நடமாடுவார் தில்லை - நீலகண்ட சிவன் ஷேக் சின்ன மௌலானா அவர்களின் இனிய நாதஸ்வரதில் இந்தப் பாடலை இங்கு கேட்கலாம்.
* காரணம் கேட்டு வாடி - கோபாலகிருஷ்ண பாரதி(?). மதுரஸ்ம்ரிதி என்றொரு ஆல்பத்தில் இந்தப் பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம். (அந்தக் தொகுப்பில் இந்தப் பாடல் சுத்தானந்த பாரதியால் இயற்றப் பட்டதாக குறிப்படப்பட்டுள்ளது.(?))
*சற்றே விலகி இரும் பிள்ளாய் - கோபாலகிருஷ்ண பாரதி
இந்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பற்றி சில வரிகள்: திருப்புங்கூரில் சிவலோக நாதனை தரிசிக்க நந்தனார் கோவிலுக்கு வெளியே நின்று எட்டிஎட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கோ வழியில் நந்தி மறைத்துக் கொண்டு இருக்கிறது. கண்ணுக்கு சரியாகத் தெரியவில்லை. உடனே,
"மாடு வழி மறித்திருக்குதே மலை போலே...உற்றுப் பார்க்க சற்றே விலகாதா..."
என்று கதறுகிறார். இது காதில் விழ, மகேஸ்வரனே
"சற்றே விலகி இரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்குதாமே, சற்றே விலகி இரும் பிள்ளாய்.."
என்று நந்திக்கு ஆணையிடுகிறார்.
"நற்றவம் புரிய நம்மிடம்் திருநாளை போவார் வந்திருக்கின்றார், சற்றே விலகி இரும் பிள்ளாய்..."
என்றதும் நந்தி விலகி வழி விட்டது.
இந்தப் பாடலை ராகா.காம் இல் இங்கு கேட்கலாம். இங்கு ஒரு விளம்பரத்திற்குப் பிறகு பாடல் ஒலிக்கும், நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் குரலில்.
* மீனாக்ஷி மேமுதம் - முத்துசாமி தீக்ஷிதர்
இந்த கிருதியோடு சேர்த்து சின்னக் கதையும் உண்டு:
மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதியில் அம்மனை தரிசிக்கும்போது, அவரையே அறியாத பரவச நிலையில் இந்தப் பாடலை பாடுகிறார். இந்த பாடலில் மீன லோசனி - பாவ மோசனி - கதம்ப வன வாசினி - என்கிற வரிகளில் வரும். இதில் பாவ மோசனி - என்ற வரிகளை அழுத்தமாக பல சங்கதிகளில் பாடிக்கொண்டு இருக்கும்போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மீனாட்சியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. உடனே தீக்ஷிதர், "அம்மா, உன்னை மனம் நோகச் செய்துவிட்ட பாவியாகி விட்டேனா நான்" என்று கண்ணீர் மல்கக் கேட்டார். உடனே அன்னையின் கண்ணீர் நின்றது, சிரித்த முகமாக மாறியது. அருகே இருந்த குருக்கள், "சுவாமி, இப்படி அம்பாளின் ஆனந்தக் கண்ணீரையும், பின்னர் சிரித்த முகமாய் மாறியதையும்ன நான் என்றும் கண்டதில்லை. நீர் பெரும் பாக்கியசாலி" என்றார். பின்னர், தன் இறுதி நாட்களில் தீக்ஷிதர் தனது சிஷ்யர்களை அழைத்து இந்தப் பாடலை பாடச்சொல்லிக் கேட்டவாறே, அதுவும் 'மீன லோசனி - பாவ மோசனி' எனற வரிகள் வரும்போது உயிர் நீர்த்தார்.
மீனாட்சி அம்மனையே மகிழ்வித்த பூர்விகல்யாணியின் ராக வலிமை அதன் மகத்துவத்தைக் காட்டுகிறது. எத்தனை மனக்கவலை நிலையிலும் மனசாந்தி அளித்து மங்களம் தரும் குணம் கொண்டது பூர்விகல்யாணி எனலாம். இது போன்ற மகத்துவங்கள் பல நிறைந்த நம் சங்கீதத்தை 'நாத உபாசனை' என்று சொல்வது சாலப் பொருந்தும்.
இந்தக் கிருதியை எஸ்.சௌம்யா அவர்கள் பாடிடக் கேட்கலாம். முதலில் ஆலாபனையும், பின்பு வயலினில் வாசிப்பதையும், தொடர்ந்து கிருதியைப் பாடுவதையும் கீழே கேட்கலாம்.
சமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்" பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் 'நி' ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.
திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் - கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.
முதலில்: சபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்
மேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:
கோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்!
தியாகராஜர் : ஆஹா, நீங்கதான் 'நந்தனார் சரித்திரம்' இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!
கோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.
தியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.
கோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே!.
என்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ - தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்? சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?
ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே பரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா? அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம் அறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?
அதுவும் "ராமா நீ சமானம் எவரு?" என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே! பாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் 'மனசு நில்ப சக்திலேகபோதே' என்ற பாடலை இயற்றினாராம்!
அடுத்ததாக:
நெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்
கொஞ்சம் நீட்டி இழுத்துப் பாடினால் போதும்... ராகமா பாடறாங்கன்னு சொல்வதைப் பார்க்கலாம்! அப்பறம் இந்த பாட்டு, இந்த ராகம், அந்தப் பாட்டு, அந்த ராகம் ஏதேதோ சொல்லறாங்க! அனேக பேருக்கு இது புரியாத விளையாட்டு போல இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
ராகம் என்றால் என்ன? எப்படிக் கண்டு பிடிப்பது?
எளிமையா சொல்லணும்னா, ஸ,ரி,க,ம,ப,த,நி போன்ற ஸ்வரங்களை எந்த வரிசையில் ஒரு பாட்டின் இசை அமைப்பில் இருக்கிறதோ அதைப்பொறுத்து அதன் ராகம் அமைகிறது.
உதாரணத்திற்கு: ஸ ரி க ப நி ஸ என்றால் ஹம்சத்வனி, ஸ ரி ம ப த ஸ என்றால் சுத்த சாவேரி என்பதுபோல வருமென சொல்லலாம்!
தொடக்கத்தில் ஸ்வர வரிசைகளைக் கொண்டு இந்த ராகம் இதுவென்று சொல்வது கடினமானதுதான்.
எளிதான வழி ஏதும் இல்லையா?
எளிதான வழி, பல பாடல்களைக் கேட்பதுதான்... ஒரு ராகம் தெரிந்த பாடலை கேட்டுவிட்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும்போது, இந்தப் பாடலும் அந்த பாடலின் ராகம்தான் என கண்டு கொள்வதுதான்!!!
இப்படி கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோம்ஸ் கதை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம். கண்டுபிடித்தை பின் கேட்பது அதிலும் ஆனந்தம்!
ஒரு சில ராகங்களை அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க இயலாதென்றாலும், ஆரம்ப நிலையில் இந்த வழி நிச்சயம் கை கொடுக்கும்!
உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களைப் பார்ப்போமே!
முதலில் மனதை இளக வைக்கும் ஷ்யாமா(சாமா) ராகத்தில்
வருவரோ வரம் தருவாரோ....? மனது சஞ்சலிக்குதையே.... எப்போது வருவரோ, வரம் தருவாரோ...?
என்ற கோபலகிருஷ்ண பாரதி பாடல், பாம்பே ஜெயஸ்ரீ பாடிட:
இந்தப் பாடலும் அமைந்திருப்பது வராளி ராகம் தான். வயலினில் மாமவ மீனாக்ஷி பாடலை வாசிக்க கேட்டாலும், உதடுகள் 'கா வா வா, கந்தா வா' என்று முணுமுணுக்கும் அதிசயம் இங்கே நடக்கப் பார்க்கலாம்!
--------------------------------------------------------------------------------------------------- மூன்றாவதாக, இன்னொரு ராகத்தையும் பார்ப்போம்: இப்போது த்வஜாவந்தி ராகம்.
எங்கு நான் செல்வேன் அய்யா நீர் தள்ளினால்... எங்கு நான் செல்வேன் அய்யா?
என்ற பெரியசாமி தூரன் அவர்களின் பாடலில் ஒரு பகுதியை பாம்பே ஜெயஸ்ரீ பாடக் கேட்கலாம்:
ஹிந்துஸ்தானியில் இருந்து கர்நாடக சங்கீதத்திற்கு வந்த இந்த ராகம், தமிழ் பாடல் வரிகளில் எப்படி மின்னுகிறது பாருங்கள்!
இந்த பாடலின் அதே சாயலில் அமைந்த இன்னொரு பாடல்:
அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம் ஆகம சம்பரதாய நிபுனே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ரக்க்ஷமாம்
என்ற முத்துசாமி தீக்ஷிதர் பாடல், எம்.எஸ் அவர்களின் தெய்வீகக் குரலில்:
இந்த பாடலும் த்வஜாவந்தி ராகம்தான்!
இது வரை மூன்று ராகங்களும், ஒவ்வொன்றிலும் இரண்டு பாடல்களும் பார்த்தோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த ராகங்களின் மொத்த அம்சங்களையும் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. இது போல ஒரு சில பாடல்களில் தொடங்கி, அந்த ராகங்களில் ஏனைய பாடல்களையும் கேட்டு வந்தால், ராகங்களில் இதர குணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.
ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்ப்டித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன்.
ஆதாலால், வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன்.
பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.
பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா.
ஹம்சத்வனி ராகம் கல்யாணி ராகத்தைப்போல் மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!
கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.