பூக்களில் உறங்கும் மெளனத்தை வைத்து கவிதையாகப் பேசுமாறு கேட்டிருக்கிறார் நண்பர் சிறில் அலெக்ஸ். இவ்வலைப்பூவில் உறங்கும் மெளனத்தைக் கலைப்பதற்கு முதலில் யோசித்தாலும் எழுதியே விட்டேன் இன்று. (ஒரே ஒரு எச்சரிக்கை: இது தொடரக்கூடும் என்பது தான்:-))) ). பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும் ...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும் நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல் ...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும். பாவொன்று படம்பிடித்து எழுத வந்த ...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும் தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும் ...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!
வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம் ...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான் தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும் ...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும் தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும் ...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும் ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும் ...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்
பிறப்புக்கும் இறப்புக்கும் பூக்கள் உண்டு ...பொதுவான வெற்றியிலும் ஒருபூச் செண்டு சிறப்பான செய்கைக்கே பூவின் கூட்டம் ...சேர்ந்துவந்து மாலையாக கழுத்தில் வீழும்! விருப்பத்தைத் தெரிவிக்கும் காதல் சின்னம் ...வகைவகையாய் நிறமிருக்கும் வார்த்தைக் கேற்ப பொறுப்பான பேச்செல்லாம் பூவே பேசும் ...பார்த்தாலோ வேறில்லை ஒற்றை மெளனம். பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார் ...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும் தூசுகளாம் பாவங்கள் தீண்டா முல்லை ...தூய்மையிலும் சொல்வதற்கு வேறு இல்லை நேசமிகு உள்ளத்தில் மழலைப் பூக்கள் ...நல்குகின்ற மகிழ்ச்சிக்கும் அளவு முண்டோ? வாசமிகு இளம்பூவில் விதையே மெளனம் ...வளர்ந்தபின்னர் வெளிப்படுமே விருட்சப் பாடல்!
posted by இப்னு ஹம்துன் at 2:21 AM on Jan 10, 2008
9 Comments
Close this window Jump to comment formவாசமிகு இளம்பூவில் விதையே மெளனம்
...வளர்ந்தபின் வெளிப்படுமே விருட்சப் பாடல்!
மிக அழகிய கவிதை நண்பரே..
தொடரட்டும்...!
Jan 10, 2008 4:56:00 AM
எம்.ரிஷான் ஷெரீப்..
வருக, வருக
நன்றி, மகிழ்ச்சி!
Jan 10, 2008 5:11:00 AM
எழுத்தோவியன், நல்ல பெயர்.
முதல் முறை வருகை இங்கே. சிறில் அலெக்ஸ் வலைத்தளத்தில் இருந்து!
//பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார்
...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும்//
அழகான வரிகள்!
நல்லா இருக்கு வார்த்தைக் கோவை!
வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
Jan 10, 2008 5:51:00 AM
இராகவன் (எ) சரவணன்,
முதல்முறை வருகைக்கும், பாராட்டு-வாழ்த்துக்கும் நன்றிகள், மகிழ்ச்சி.
அடிக்கடி வாங்க.
Jan 10, 2008 6:04:00 AM
மிக அழகிய கவிதை
Jan 10, 2008 5:07:00 PM
நன்றி திகழ்மிளிர்,
(ஏனோ பதிப்பிக்கப்பட்டபின்னும், பதிவில் உங்கள் பின்னூட்டம் தெரிய வரவில்லை).
Jan 11, 2008 12:50:00 AM
அழகிய கவிதை..பாராட்டுகள்
Jan 11, 2008 2:01:00 AM
பாராட்டுக்கு நன்றி பாசமலர்
Jan 12, 2008 12:22:00 AM
நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் -மரபுக் கவிதை. இலக்கிய நெடி எங்கும் வீசுகிறது.
//...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்//
போர்த்தியி ருக்கும் - தவறென்றால் திருத்திக் கொள்க
பூவின் சிரிப்பே கவிதையின் அடிப்படை.
மனித வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் பூக்கள் தொடர்புடையவை. வெவ்வேறு நிகழ்வுகளுக்கு வெவ்வேறு பூக்கள்.
மழலையையும் பூவையும் இணைத்த காட்சி அருமை.
நல் வாழ்த்துகள்
Jan 16, 2008 1:05:00 AM